"ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்”
- அகிலத்திரட்டு
ஸ்ரீ வைகுண்டர் (C.1833 – C.1851): அகிலத்திரட்டு வேதாகமத்தின்படி, உலகைப் படைத்துக் காக்கும் இறைவனான ஸ்ரீ மஹாவிஷ்ணு, கிருஷ்ண அவதாரத்துக்கு பின்னர் கலியுகத்தில் எடுத்த 10-வது அவதாரமே ஸ்ரீ வைகுண்டர் அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் பரம்பொருள் ஒன்றே தான் என்பதை உணர்த்தும் படியாக சிவன், விஷ்ணு, பிரம்மா எனும் மும்மூர்த்திகளும் ஏகமூர்த்தியாகி ஒரே மூர்த்தியாய் சர்வ வல்லமை படைத்த ஸ்ரீ வைகுண்டராக அவதரித்தார். அகிலத்திரட்டு வேதநூல் ஸ்ரீ வைகுண்டரை ஸ்ரீ பண்டாரம், ஆண்டவர், மாயோன், நாராயணர், விஷ்ணு, ஸ்ரீ திருமால், ஸ்ரீ பெருமாள், அய்யா நாராயணர், சிவ நாராயணர் மற்றும் சூரிய நாராயணர் என்றும் பல நாமங்களில் குறிப்பிடுகின்றது. அதை போலவேதான் பக்தர்களும் அவரை ‘அய்யா’, ‘ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி’ மற்றும் ‘ஸ்ரீமன் நாராயண சுவாமி’ என்று பெருமையோடு அழைத்து வணங்கி வருகின்றனர்.
எப்பொழுதெல்லாம் உலகில் தர்மம் குன்றி அதர்மம் தலை விரித்தாடுமோ, அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட இறைவன் மனித உருவில் அவதரிப்பார் என்ற நியமத்தின்படி கலியுகத்தில் நல்லோர்களை காக்க ஸ்ரீ மஹாவிஷ்ணு பூமியிலே ஸ்ரீ வைகுண்டராக அவதரித்தார்.இறைவன் இந்த மண்ணில் அவதரித்த ஒவ்வொரு கால கட்டத்திலும், மானிடர்கள் அந்தந்த அவதாரங்களின் மகிமையை அறிந்து கொள்ள, அவற்றை வாய் மொழிக் கதைகளாகவோ, புண்ணிய நூல்கள் மூலமோ வெளித் தெரிய வைக்கின்றார். ஸ்ரீ இராமருடைய அவதாரத்தை அறிந்து கொள்ள இராமாயணத்தையும், ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை அறிந்து கொள்ள மகாபாரதத்தையும், ஸ்ரீ முருக அவதாரத்தை அறிந்து கொள்ள கந்த புராணத்தையும் அருளிய இறைவன், ஸ்ரீ வைகுண்ட அவதாரத்தை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அகிலத்திரட்டு நூலினை பாடல் வடிவில் தமிழில் அருளி உள்ளார். அகிலத்திரட்டு அம்மானை நூலினை ஸ்ரீமன் வைகுண்டரின் பக்தர்கள் புனித வேத நூலாகவே கருதுகின்றனர். அகிலத்திரட்டு எனும் வேத நூலானது ஸ்ரீ வைகுண்டரின் அவதாரம், உபதேசங்கள், அவர் நடத்திய திருவிளையாடல்கள் போன்ற அனைத்தையும் அறிந்து கொள்ளவும், நல் வழிப்பாதையில் நடந்து கலியின் தீய தாக்கங்களில் இருந்து விடுதலை பெறவும் வழி காட்டும் புண்ணிய நூலாகும். கொல்லம் வருடம் 1016 ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று (10th December 1841 CE), வெளியான இந்த நூலில் காணப்படும் செய்திகள் அனைத்தையுமே ஆண்டவரின் சீடரான திரு. அரிகோபாலன் என்பவரின் கனவில் ஆண்டவரே தோன்றி அருள் உரையாகக் கூற, அதையே எழுத்து வடிவில் தமிழ் பாடல் அல்லது செய்யுளை போல திரு. அரிகோபாலன் எழுதி வைத்தார்.
இவ் அகிலத்திரட்டு அம்மானை என்பது
“தர்ம யுகமாக்கி தாரணியை ஆளுதற்கு கர்ம கலியில் கடவுளார் வந்த வரலாறு”
அகிலத்திரட்டு அம்மனை எனும் புனித வேதநூலானது, கலியை அழித்து தர்மத்தை பூமியில் மீண்டும் நிலைநாட்ட வந்த கடவுள் ஸ்ரீ வைகுண்ட சுவாமியின் அவதார மேன்மைகளைக் குறித்த செய்திகளை உள்ளடக்கியது.
மேலும் இப் புனித நூலானது உலகம் தோன்றிய பின்னணியையும், அதன் பின் பல கோடி ஆண்டுகளாக நடந்த நிகழ்வுகளையும், ஸ்ரீ வைகுண்டராக அவதரித்த மஹாவிஷ்ணுவுடைய முந்தைய அவதார செய்திகளையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும் வரிசையாக கூறுகிறது. வேத நூல் எனப்படும் இது வேத வியாசர் எழுதிய வேத நூல்களில் குறிப்பிட்டு இருந்ததை போல தெய்வ லீலைகளை வெளிப்படுத்திய வேத நூல் என்பதாகவே நம்புகின்றார்கள்.
இன்னாள் விவரமெல்லாம் எடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக்
காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக உள்வினை நோய் தீருமென்று
அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே
அகிலத்திரட்டு
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் முந்தைய அவதாரங்கள்:
அகிலத்திரட்டு வேதநூல் கூற்றின்படி, பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கும் இறைவன் தாமே சிவமாக, சக்தியாக, நாதமாக, விஷ்ணுவாக, ருத்திரராக, மகேஷ்வரனாக தோன்றி, சூரிய பகவான், வாயு பகவான் போன்றவர்களை படைத்த பின் பல்வேறு ஜீவராசிகளையும் படைத்து, அதிலே 84 லட்சம் வகையான உயிரினங்களையும் படைத்து, இந்த உலகை இயக்கி வருகின்றார். அவர் படைத்து இயக்கி வரும் இந்த பூவுலகில் எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் தலை தூக்குமோ அப்பொழுதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக இறைவன் தானே ஒரு அவதார புருஷனாக தோன்றுகிறார்.
ஆதியில் பல்வேறு ஜீவன்களையும் பல்வேறு யுகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் தோன்றியவுடன், முதல் யுகத்திற்கு ‘நீடிய யுகமென’ ஆதி பிரம்மா பெயரிட்டப் பின் பிரபஞ்சம் எந்த அம்சங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க பரமேஸ்வரன் நெருப்பு மூட்டி ஒரு யாகம் செய்யத் துவங்கினார். அந்த யாகத் தீயின் நடுவில் இருந்து குரோணி என்கிற கொடிய அசுரன் வெளி வந்தான். குரோணி வெளி வந்த நாட்களிலேயே அவன் தேவ கணங்களை துன்புறுத்தத் துவங்கியதும் இல்லாமல் தேவலோகங்களையும், கயிலையையும் அழிக்க முற்பட்டபோது, அவனை அழித்து தேவர்களையும் தேவலோகத்தையும் காப்பாற்ற’ தேவையான சக்தியை ஈசரிடம் இருந்து பெற ஸ்ரீ மஹாவிஷ்ணு தவத்தில் இருந்தார். அந்த தவத்தினால் மகிழ்ச்சி அடைந்த ஈசரும் “குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க வேண்டும், அவ்வாறு அழித்தவுடன், அவனின் ஒவ்வொரு சதை பிண்டமும் மீண்டும் ஒரு அசுரனாக பூமியில் பிறக்கும், அப்படி பிறக்கும் அசுரர்களை நீரே உத்தமராக அவதரித்து அழிக்க வேண்டும்” எனக் கூறி ஸ்ரீ மஹாவிஷ்ணு கேட்ட வரங்களை தந்து அருளினார்.
உகத்துக் குகமே உத்தமனாய் நீபிறந்து
அகத்துக் கவன்பிறப்பு ஆறு யுகமதிலும்
உண்டு மவன்சீவன் உயிரழிவு வந்தவந்நாள்
பண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக்
கொன்றுபோட் டேநரகக் குழிதூர்க்க நாள்வருங்காண்
என்று விடைகொடுத்தார் ஈசுரர்கா ணம்மானை
அகிலத்திரட்டு
ஈசுரர் கொடுத்த வரத்தின்படியே, மஹாவிஷ்ணுவும் குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதம் செய்தார். அதை தொடர்ந்து முதல் யுகமான நீடிய யுகமும் முடிவடைந்தது. அடுத்தடுத்துப் பிறந்த யுகங்களில் தோன்றிய ஸ்ரீ மஹாவிஷ்ணு தர்மத்தை நிலை நாட்ட சில அசுரர்களை அழிக்க வேண்டி இருந்தது. இரண்டாவது யுகமான சதுர் யுகத்தில் குரோணியின் வெட்டப்பட்ட சதை பிண்டத்தில் இருந்து வெளிவந்த அசுரரான குண்டோமசாலியையும், மூன்றாம் யுகமான நெடிய யுகத்தில் குரோணியின் மற்றுமொரு சதை பிண்டத்தில் இருந்து வெளி வந்த அசுரர்கள் தில்லை மல்லாலன், மல்லோசிவாகனன் போன்றவர்களையும் அழித்தார்.
நான்காம் யுகமான கிரேதா யுகத்தில், குரோணியின் மற்றுமொரு சதை பிண்டத்தில் இருந்து தோன்றிய சிங்க முகசூரன் மற்றும் சூரபத்மனெனும் இரு அசுரர்களும் உடனடியாக தேவேந்திரனான இந்திரன் மற்றும் வேறு எவராலும் அவர்களை எளிதில் கொல்ல முடியாத அளவிலான வரங்களை பெற்று, அதர்ம வழியில் அகிலத்தை அடக்கி அரசாண்டனர். அநியாயம் தலை விரித்தாடவே, ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்ரீ முருகப் பெருமானாக அவதரித்து ‘அற்ப மிக்க வாழ்க்கையில் உள்ள நீங்கள் அநியாயம் செய்வதை விட்டு விடுங்கள்’ என அவர்களுக்கு புத்திமதி கூறினார். ஆனால் அவர் கூறிய அறிவுரையை கேட்க சூரன் மறுக்கவே, அவனையும் சூரப்படைகளையும் வேலாயுதத்தால் அழித்தார். பின்னர் சிங்க முகசூரனை மீண்டும் இரணியனாகப் பிறப்பு எடுக்க வைத்து அந்த பிறவியிலும் அவனுக்கு புத்திமதி கூற, அந்த அறிவுரையையும் அவன் ஏற்க மறுக்கவே ஒரு தூணிலிருந்து ஸ்ரீ நரசிம்மராக அவதரித்த ஸ்ரீ மஹாவிஷ்ணு, அந்த மாபாவி இரணியனை காலை மற்றும் மாலையும் அற்ற சந்தி வேளையில் வாயிற்படியில் வைத்து, தனது கோரமான நகங்களினால் அவனது இதயத்தை பிளந்து வதம் செய்தார்.